குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 52 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்


குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 52 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 8:49 PM GMT)

குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 52 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.

குமாரபாளையம்,

குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் அரசின் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழுவும், பறக்கும்படை பொறியாளர் மணிவண்ணன், உதவிப்பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் மற்றொரு குழுவும் நேற்று தனித்தனியாக குமாரபாளையத்திற்கு சென்று சோதனை நடத்தின.

அப்போது குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ரோடு, கோட்டைமேடு, ஆனங்கூர் ரோடு, மேற்குகாலனி, எதிர்மேடு, எருமைக்கட்டுதுறை, அம்மன் நகர், சின்னப்பநாய்க்கன்பாளையம், எடப்பாடி ரோடு, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் அனுமதி இல்லாமலும், சாயக்கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்தும் 52 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அனுமதியின்றி இயங்கி வந்த 52 சாயப்பட்டறைகளும் இடித்து அகற்றப்பட்டன. அப்போது குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வராஜ், மாரிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாயப்பட்டறை இடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Next Story