கோவில்களில் வருசாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம்
விளாத்திகுளம், தென்திருப்பேரை, கோவில்பட்டி கோவில்களில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் விமானங்களுக்கும், சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷிணி, தக்கார் சிவகலை பிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
நவ கைலாயங்களில் 7-வது தலமான தென்திருப்பேரை அழகிய பொன்னம்மை உடனுறை கைலாசநாத சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கோவில் விமானங்களுக்கும், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 63 நாயன்மார்கள், தொகை அடியார்கள், மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுக்கு 6-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, காலையில் சங்கல்பம், கும்பஸ்தாபனம் நடைபெற்றது. பின்னர் 63 நாயன்மார்கள், தொகை அடியார்கள், மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் திருமுறை பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவில் திருமுறை விண்ணப்பம், அப்பர் அடிகள் உழவாரப்பணி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷிணி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, திருமுறை மன்ற தலைவர் கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, செயலாளர் நெல்லையப்பன், பொருளாளர் சிவானந்தம் மற்றும் நிர்வாகிகள், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story