திருஉத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார்


திருஉத்தரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 5 Feb 2020 4:30 AM IST (Updated: 5 Feb 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருஉத்தரகோசமங்கையில் செயல்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டார்.

ராமநாதபுரம்,

மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 385 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தரமான விதைகளை பெற்று பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை மூலம் விதைப்பண்ணைகள் அமைத்தல் மற்றும் விதைச்சான்று நடைமுறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தரமான விதைகளை உற்பத்தி செய்திட ஏதுவாக ஆர்வமுள்ள முன்னோடி விவசாயிகளுக்கு விதைச்சான்று நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு 475 எக்டேர் பரப்பளவில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடுதுறை-45, அண்ணா-4, கோயம்புத்தூர்-51, டி.கே.எம்-13, ஐ.ஆர்-64, ஆர்.என்.ஆர்-15048 உள்ளிட்ட நெல் ரகங்களில் தரமான சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

திருஉத்தரகோசமங்கை, திருவாடானை மற்றும் பரமக்குடி ஆகிய இடங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விதைப்பண்ணை விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விதைகள் அருகில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு விதை சுத்திகரிப்பு பணி, ஈரப்பதம் மற்றும் மிதவை பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு தர ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய தர ஆய்வுகளின் இறுதியில் சம்பந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர்கள் சான்றொப்பம் வழங்குவார். இதன் மூலம் வறட்சியை தாங்கி குறைந்த நீரில் அதிக மகசூல் வழங்கிடும் வகையிலான தரமான விதைகள் பிரிக்கப்பட்டு மிகக்குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நடப்பாண்டில் 600 மெட்ரிக் டன் விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 185 மெட்ரிக் டன் அளவில் நெல் வயல்மட்ட விதைகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு 87 மெட்ரிக் டன் அளவில் விதை சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கையில் வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் சென்று விதை சுத்திகரிப்பு செய்து தரம் பிரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விதைப்பண்ணை பதிவு, சான்று விதைகள் கொள்முதல் ஆகிய திட்டங்கள் குறித்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து திருஉத்தரகோசமங்கையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, அங்கு விவசாயிகள் நெல்லை தரம் பிரித்து விற்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், குப்பைகளை அகற்றி பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சேக்அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் நாகராஜன், திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால், விதை சுத்திகரிப்பு நிலைய வேளாண்மை அலுவலர் மீனா உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story