தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி கார் டிரைவர் பலி


தண்டவாளத்தை கடக்க முயன்றபோது   மின்சார ரெயில் மோதி கார் டிரைவர் பலி
x
தினத்தந்தி 5 Feb 2020 3:14 AM IST (Updated: 5 Feb 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு-எழும்பூர் இடையே மின்சார ரெயில் மோதி கார் டிரைவர் பலியானார்.

சென்னை, 

சென்னை விருகம்பாக்கம் வேதாநகர் பகுதியை சேர்ந்தவர் டோமினிசவீயோ (வயது 32). கார் டிரைவர். இவர் கன்னியாகுமரியில் நடைபெற்ற தனது உறவினர் ஒருவரது திருமண விழாவில் கலந்துகொண்டு, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் சேத்துப்பட்டு-எழும்பூர் இடையே (கெங்குரெட்டி சுரங்கப்பாதை அருகில்) ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து டோமினிசவீயோ, தனது வீட்டுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் டோமினிசவீயோவின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story