கொரோனா வைரஸ் பாதிப்பா? சீனாவில் இருந்து சென்னை வந்தவருக்கு திடீர் காய்ச்சல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி
சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தவருக்கு திடீர் காய்ச்சல் வந்ததால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 சீனர்கள் உள்பட 10 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் புனே மற்றும் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவில் அந்த 10 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.
இந்த நிலையில் தாம்பரம் மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த காசிராமன் (வயது 40) என்பவர் கடந்த 24-ந் தேதி சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை வீட்டில் வைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிராமனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனி ‘வார்டில்’ அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் காசிராமனின் சளி, ரத்தம் உள்ளிட்டவைகளின் மாதிரிகள் சென்னை கிங் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story