பொத்தேரி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்


பொத்தேரி பல்கலைக்கழகத்தில்   துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்
x
தினத்தந்தி 5 Feb 2020 4:30 AM IST (Updated: 5 Feb 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

பொத்தேரி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங், கலை, அறிவியல், சட்டப்படிப்பு உள்பட பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளது. இங்கு தமிழகம், வட மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விடுதி மற்றும் கல்லூரி சுற்றுப்புற பகுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவகத்தின் அருகே எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொண்டனர். இதில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர் திடீரென தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை பார்த்த சக மாணவர்களும், உணவகத்தில் இருந்த ஊழியர்களும் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த காட்சிகள் அனைத்தையும் கல்லூரி மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மறைமலைநகர் போலீசார் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அங்கிருந்த மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் மாணவர்கள் மோதிக்கொள்ளும் காட்சியில் துப்பாக்கி வைத்திருக்கும் மாணவர், பட்டா கத்தியுடன் சண்டை போடும் மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர்கள் இடையே இந்த மோதல் சம்பவம் முன்விரோதம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது காதல் தகராறில் நடந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேங்கடமங்கலம் கிராமத்தில் முகேஷ் என்ற பாலிடெக்னிக் மாணவரை அவரது நண்பர் கைத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு ரவுடி கல்லூரி வளாகத்திற்குள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் சகஜமாக மாணவர்கள் மற்றும் ரவுடிகளிடம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story