தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி வார்டு - கலெக்டர் நேரில் ஆய்வு


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி வார்டு - கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 5 Feb 2020 5:45 AM GMT (Updated: 5 Feb 2020 5:37 AM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார். அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் ஜெயபாண்டியன் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் வருகின்றன. குறிப்பாக சீனா, ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து கப்பல்கள் வருகின்றன. இதனால் துறைமுகத்தில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. துறைமுகத்துக்கு வரும் மாலுமிகள் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

அவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முழுமையாக சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 6 படுக்கைகள் உள்ளன. இதுதவிர முகக்கவசம் மற்றும் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வைரஸ் தாக்கத்தை குறைப்பதற்கு நன்றாக கைகழுவ வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இதனால் மக்கள் பயப்பட தேவை இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4 பேர் சீனா சென்று வந்து உள்ளனர். அவர்களுக்கு எந்தவித வைரஸ் தாக்கமும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story