நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 74 சிற்றின வகை பறவைகள் கண்டுபிடிப்பு
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 74 சிற்றின வகை பறவைகள் குளங்களில் வசித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை,
தாமிரபரணி நீர்வாழ்பறவைகள் கணக்கெடுக்கும் பணி, மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் மூலம் கடந்த மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடந்தது. இந்த பணியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், விவசாயிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், தொழில் முனைவோர், டாக்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் 6 குழுக்களாக 51 பாசன குளங்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பில் 74 சிற்றின வகைகளை சேர்ந்த 24 ஆயிரத்து 411 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அதிகமாக உண்ணிக்கொக்கு 3 ஆயிரத்து 840-ம், தகைவிலான் குருவி 2 ஆயிரத்து 93-ம், சில்லித்தாரா 2 ஆயிரத்து 9-ம், நீலச்சிறகு வாத்து 1752-ம், உப்புக்கொத்தி 1368-ம், நாமத்தலை வாத்து 1297-ம், சிறிய நீர்காகம் 1187-ம், பதிவாகி உள்ளன. சீழ்க்கைச் சிறகி என்ற வாத்தினம் முதல் முறையாக இந்த வருட பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகி உள்ளது. இந்த வாத்து பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளத்திலும், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்திலும் வசிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர்குளத்தில் அதிகப்பட்சமாக 1602 பறவைகளும், கடம்பாகுளத்தில் 1447 பறவைகளும், கஷ்பா குளத்தில் 1389 பறவைகளும், நெல்லை மாவட்டம் குப்பக்குறிச்சி குளத்தில் 1132 பறவைகளும், மானூர் குளத்தில் 1125 பறவைகளும் பதிவாகி உள்ளன. குழுவூர், மானூர், மாறாந்தை, நயினார்குளத்தில் பறவைகள் கூடுகட்டி இனபெருக்கம் செய்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது. கழுவூர் குளத்தில் கூளக்கிடா, நத்தைக்குத்தி, நாரை, கரண்டி வாயன் போன்ற பறவைகள் இனபெருக்கம் செய்து வருகிறது.
நெல்லை நயினார்குளம் கரையில் உள்ள மருதமரம், இலுப்பை மரம், பனை ஆகியவற்றில் சாம்பல்நாரை, பாம்பு தாரா ஆகியவை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. மானூர், மாறாந்தை குளங்களில் உள்ள உடக்கருவை மரங்களில் வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்ப தாரா, நீர்காகம் போன்ற பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகிறது. பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்ற இந்த குளங்களை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும்.
இங்குள்ள பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்பட்டு இருந்தாலும், அந்த குளங்களை சுற்றி உள்ள கிராம மக்கள் சரியாக பராமரிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கணக்கெடுப்பு நடந்த பெரும்பலான குளங்களில் மதுப்பாட்டில்களும், குப்பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். குளங்களை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பராமரிக்கவேண்டும்.
இந்த தகவலை அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story