தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்ட நெரிசலை குறைக்க நேர்வழியிலும் அனுமதி
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை குறைக்க நேர்வழியிலும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி கடந்த 1-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கிய அன்று மாலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. அன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். யாகசாலை பூஜை நடைபெற்ற 2-வது நாள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் அன்று வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
அன்று 1 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அதன் பின்னர் நேற்று முன்தினம் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேற்று காலையிலும் பக்தர்களின் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. இந்த நிலையில் மாலையில் இருந்து கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் மாலையில் இருந்து கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பக்தர்கள் செல்லும் பாதையில் கூட்டம் அதிக அளவு வந்ததால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கோவிலின் முன்புறம் வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியாரும் அங்கு வந்து கூட்ட நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் செல்லும் பாதையிலும், நேர் வழியிலும் பக்தர்களை அனுமதிக்குமாறு கூறினர்.
கூட்டம் அதிக அளவில் வந்து கொண்டிருந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்ட நெரிசலை குறைக்க பக்தர்களை நேர்வழியில் விட்டனர். அதன் பின்னர் கூட்ட நெரிசல் குறைந்தது. இருப்பினும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
நேற்று காலை கர்நாடக எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா தஞ்சை பெரியகோவிலுக்கு காலை 9.50 மணிக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அவருடைய காரை போலீசார் தடுத்தனர். வி.வி.ஐ.பி.க்கான பாஸ் அவரிடம் இல்லாததால் போலீசார் அவரை அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து கோவில் குருக்கள், போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அவர் யாகசாலை பூஜை நடைபெறும் இடத்திற்கு சென்று கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story