காகித குடோனில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


காகித குடோனில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:30 AM IST (Updated: 5 Feb 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவல்லிக்கேணியில் காகித குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளை தெருவில் காகித மற்றும் ‘பிளைவுட் போட்டோ லேமினே‌‌ஷன்’ உபகரணங்கள் அடங்கிய குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். தீ மளமளவென அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

அங்கிருந்தவர்கள் இது குறித்து தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா, எழும்பூர், தேனாம்பேட்டை உள்பட 10 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் லாரிகள் மூலமும் தண்ணீர் வரவழைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி காலை 8 மணிக்கு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த குடோன் திருவல்லிக்கேணி முக்தனி‌ஷா பேகம் தெருவை சேர்ந்த முகமது கரிமுல்லா(வயது 49) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

குடோனில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீவிபத்துக்கு காரணம் எனவும், தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது எனவும் போலீசார் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் ஜன்னல்களும் தீயிக்கு இறையாகின. தீ விபத்தில் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story