சிவ, சிவ என்ற பக்தி கோ‌‌ஷம் முழங்க திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


சிவ, சிவ என்ற பக்தி கோ‌‌ஷம் முழங்க   திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் குடமுழுக்கு   ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Feb 2020 5:00 AM IST (Updated: 5 Feb 2020 11:51 PM IST)
t-max-icont-min-icon

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் குடமுழுக்கு சிவ, சிவ என்ற பக்தி கோ‌‌ஷம் முழுங்க கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை,

சென்னை, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோவிலாகும். கி.பி. 7-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவிலில், சிவபெருமான் மருந்தீசுவரராகவும், பார்வதி தேவியார் திரிபுரசுந்தரியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் உள்ள கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரி‌ஷிகோபுரம், ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்கள் விஜயகணபதி, சுப்பிரமணியர், மருந்தீசுவரர், திரிபுரசுந்தரி, தியாகராஜர், நடராஜர் முதலான சன்னதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, ரூ.75 லட்சம் செலவில் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீசுவரர், பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

திருக்கல்யாண வைபவம்

இதற்காக கடந்த 2-ந்தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரம், விநாயகர் சன்னதி கோபுரம், சாமி சன்னதி, அம்பாள் திரிபுரசுந்தரி, நடராஜர், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், முருகன் ஆகிய சன்னதிகளில் உள்ள அனைத்து விமான கலசங்களுக்கு, வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வானமே அதிரும் வகையில் சிவ, சிவ என்ற பக்தி கோ‌‌ஷங்கள் முழுங்கப்பட்டன.

முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நிகழ்ச்சியும், தியாகராஜர் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

இயற்கை பேரழிவில் இருந்து காக்கப்படும்

தமிழகத்தில் உள்ள 130 கோவில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் மற்றும் மயிலாடுதுறை, தாமிரபரணியில் பூ‌‌ஷ்காரம் திருவிழாவை நடத்தியவருமான சென்னையை சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியம் கூறியதாவது:-

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் மூலவர் மருந்தீசுவரர் மேற்கு நோக்கியும், அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் புணரமைக்கப்பட்டு அனைவருடைய ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தின் போது செப்பு தகடுகள் பதிப்பதன் மூலம் பூமியை சமன்நிலைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கோவில் பழமை மாறாமல் சுத்தப்படுத்தப்படுவதுடன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்தும் காக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதன் மூலம் அனைத்து விதமான வளங்களையும் நாம் பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story