திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்


திருவேற்காடு   தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:15 AM IST (Updated: 6 Feb 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி,

சென்னையில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

ஆண்டுதோறும் இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. வருகிற 18-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் தேவி கருமாரியம்மன் எழுந்தருளினார்.

இணை கமிஷனர் செல்லத்துரை தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தம்புசாமி நகர், தேரோடும் வீதி, கோலடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story