தமிழக அரசின் முன்மாதிரி விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


தமிழக அரசின் முன்மாதிரி விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:30 AM IST (Updated: 6 Feb 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் முன்மாதிரி விருது பெற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டிற்கான மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முன்மாதிரி விருது 2020-ம் ஆண்டு முதல் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி அன்று வழங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தவர்களில் சிறப்பாக முன்னேறிய ஒரு திருநங்கைக்கு முன்மாதிரி விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் பாலினத்தவர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளின் வாழ்க்கையில் முன்னேற உதவிஇருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. 

இந்த விருது பெற விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தவர் ஏதேனும் விருது பெற்றிருப்பின் பெற்ற விருதுகளின் விவரம், விருதின் பெயர் மற்றும் யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம் மற்றும் சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படத்துடனும், சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு மற்றும் சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின்- சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் மற்றும் சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது விவரங்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட்டு தலா 2 நகல்களுடன் கையேடு தயார் செய்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வருகிற 10-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story