பெங்களூருவில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை ரூ.40 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
பெங்களூருவில் வீட்டில் பதுக்கி வைத்து போதைப்பொருட்கள் விற்ற கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.சென்னசந்திரா, 1-வது கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த வீட்டில் வசித்து வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் வயநாடுவை சேர்ந்த சின்டோ தாமஸ் (வயது 35), திருவனந்தபுரத்தை சேர்ந்த தாஜுத்தீன் தாலட் (29) என்று தெரிந்தது.
ரூ.40 லட்சம் மதிப்பு
இவர்கள் 2 பேருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல போதைபொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த செந்தில், அந்த கும்பலிடம் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருட்களை வாங்கி சின்டோ, தாஜுத்தீனிடம் விற்று வந்தது தெரியவந்தது. பின்னர் போதைப்பொருட்களை 2 பேரும் தங்களது வீட்டில் பதுக்கி வைத்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், ஊழியர்கள், தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து 4 கிலோ 350 கிராம் போதை எண்ணெய், போதை மாத்திரைகள், 22 கிலோ கஞ்சா, ரூ.9,300 மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story