துப்பாக்கியால் சுட்டு பணம் பறிக்க முயன்ற வழக்கில் தாதாவின் கூட்டாளிகள் 5 பேர் சிக்கினர்


துப்பாக்கியால் சுட்டு பணம் பறிக்க முயன்ற வழக்கில்    தாதாவின் கூட்டாளிகள் 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:34 AM IST (Updated: 6 Feb 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியால் சுட்டு பணம் பறிக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய தாதாவின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை மலாடு குரார் பகுதியில் ஆனந்த் மருந்து கடை மற்றும் கவரிங் நகைக்கடை உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கடையை நோக்கி சுட்டார்.

பின்னர் தான் கொண்டுவந்த துண்டுச்சீட்டு ஒன்றை கடையின் வாசலில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த துண்டுச்சீட்டில் ஆனந்த் மருந்துக்கடை உரிமையாளர் ரூ.5 கோடியும், அருகில் உள்ள ரோகாடியா டிரேடர்ஸ் கடை உரிமையாளர் ரூ.1 கோடியும் தங்களுக்கு தரவேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது.

5 பேர் கைது

இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை நடத்தினர். இதில் கடை முன்பு தூப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளியான நிகில் சந்திரகாந்த் (வயது30) என்பவர் போலீசில் பிடிபட்டார்.

மேலும் அவருடன் தொடர்புடைய சூரஜ் பாபு (28), விகாஸ் ஜெய்பிரகாஷ் (23), ஜித்து (30), பிரவின் பிரகாஷ் (22) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட 5 பேரும் தாதா உதய் பாட்டக்கின் கூட்டாளிகள் என விசாரணையில் தெரியவந்தது. தாதா உதய் பாட்டக் ஏற்கனவே கொலை, மிரட்டி பணம் பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story