அரசுத்துறை அதிகாரிகள் தனியார் கார்களை வாடகைக்கு எடுத்து நிதியை விரயமாக்குகின்றனர் பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
அரசுத்துறை அதிகாரிகள் தனியார் கார்களை வாடகைக்கு எடுத்து நிதியை விரயமாக்குகின்றனர் என்று பாரதீய ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரூ.50 லட்சம் விரயம்
புதுவை மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் உள்ள அதிகாரிகளின் வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தும், அதை பராமரித்து இயக்காமல் பல துறைகளில் அதிகாரிகள் தனக்கு வேண்டிய டிராவல் ஏஜென்சிகள் மூலம் வாகனத்தை வாடகைக்கு எடுத்து மாதம் ஒன்றுக்கு மக்களின் வரிப்பணத்தை ரூ.50 லட்சம் வரை விரயமாக்குகின்றனர்.
சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்வதாக பொய் கணக்கு எழுதி வருகின்றனர். அதிகாரிகள் அலுவலக வேலைக்கு மட்டும் பயன்படுத்தாமல் சொந்த வேலைகளுக்கும் பயன்படுத்துவதோடு, தங்கள் குடும்பத்தினரும் பயணம் செய்ய இந்த வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
புதுச்சேரியில் இதுபோன்ற ஊழல்கள் பல ஆண்டுகளாக நடந்து வருவதை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு கவர்னர் குழு அமைத்து சரியான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story