ஒதியம்பட்டு - திருக்காஞ்சி பாலம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்
ஒதியம்பட்டு - திருக்காஞ்சி பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கியது.
வில்லியனூர்,
வில்லியனூர் - மங்கலம் தொகுதிகளை இணைக்கும் வகையில் ஒதியம்பட்டு - திருக்காஞ்சி கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ரூ.24 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நிலம் கையகப்படுத்துதல் உள்பட பல்வேறு காரணங்களால் பாலம் கட்டும் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும் 90 சதவீத பணிகளே முடிக்கப்பட்டது. இணைப்பு சாலை பணி மட்டும் நடைபெறாமல் இருந்தது.
மீண்டும் பணிகள் தொடக்கம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அதற்கான ஆவணங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒப்படைத்தனர். அதனைதொடர்ந்து உடனடியாக மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டது.
அதேபோல் ஒதியம்பட்டு - திருக்காஞ்சி பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களும் அதற்கான ஆவணங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ஒதியம்பட்டு - திருக்காஞ்சி பாலம் அமைக்கும் பணிகள் நேற்று முன் தினம் மீண்டும் தொடங்கப்பட்டது.
மாசிமக திருவிழா
திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் மாசிமக திருவிழா நடக்கிறது. இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். எனவே மாசிமக விழாவுக்குள் இந்த பாலத்தை திறக்கும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story