கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு


கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2020 4:30 AM IST (Updated: 6 Feb 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்த பயணிகளும் அதிகமாக வருகின்றனர். எனவே இங்கு விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்கின்றனர். பயணிகள் யாருக்காவது காய்ச்சல் இருந்தால், அவர்களுக்கு உரிய உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவ குழுவினர் உள்ளனர்.

இந்த நிலையில் கோவை விமானநிலையம் அருகே உள்ள சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், சிறப்பு வார்டு குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளிடம் அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, இந்த வைரஸ் பரவுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவ-மாணவிகள் உரிய பதில் அளித்தனர். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு பகுதியில் சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். கோவை விமான நிலையத்தில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்களை இங்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் முருகேசன், மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார், இருப்பிட மருத்துவ அதிகாரி குழந்தைவேலு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து சுகாதாரதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை விமான நிலையத்துக்கு மிக அருகில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளதால், இங்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. நோய் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை தனித்தனி அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கவும் வசதி உள்ளது. சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை 28 நாட்கள் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

கோவைக்கு விமானத்தில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களை இந்த சிறப்பு வார்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்போம். மேலும் அவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்க அதிகபட்சம் 48 மணி நேரம் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story