போதிய மழை இல்லாததால், சத்திரப்பட்டி பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் கவலை
சத்திரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, காளிப்பட்டி, போடுவார்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, தாசரிப்பட்டி, புதுக்கோட்டை, விருப்பாட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கத்தரிக் காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் பறித்து தரம் பிரிக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் உள்ள குறைந்தளவு நீரை பயன்படுத்தி கத்தரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் அங்கு கத்தரிக்காய் சாகுபடி பாதிக் கப்பட்டுள்ளது. அதாவது விளைச்சல் குறைந்தது மட்டுமின்றி விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 30 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கத்தரிக்காய் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சியாகி ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே தண்ணீர் இல்லாத நிலையில் கடும் பற்றாக் குறைக்கு மத்தியில் கத்தரிக் காய் சாகுபடி செய்தோம். பறிப்புக்கூலி, போக்குவரத்து ஆகியவற்றுக்கு அதிக அளவு பணம் செலவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் விளைச்சல் மற்றும் விலை வீழ்ச்சியால் கத்தரி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story