தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் ஊராட்சி பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் - மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்


தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் ஊராட்சி பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் - மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:45 AM IST (Updated: 6 Feb 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் ஊராட்சி பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட ஊராட்சி செயலாளர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு ஊராட்சி பகுதிகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக ஊரக வளர்ச்சி பணிகளுக்கான திட்டம், வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கான அனைத்து உதவிகளும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செய்யப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து ஊராட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்காக கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.12 கோடியே 45 லட்சத்து 5 ஆயிரத்து 857 நிதி திட்ட அலுவலர், தனிஅலுவலர் ஆகியோரின் பரிந்துரைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பணிகளை தொடங்குவதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறையும் அமல்படுத்தப்பட்டது. எனவே நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஊரக வளர்ச்சி பணிகளுக்காக எந்த நிதியும் ஒதுக்கப்பட கூடாது. ஆனால் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டரும் விடப்பட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலக பதிவேடுகளில் குறிப்பு உள்ளது. இதன் காரணமாக மாவட்ட ஊராட்சியில் தற்போது நிதியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஊரக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்ப ஊராட்சி கணக்கில் வரவு வைப்பதுடன், அதுதொடர்பாக விடப்பட்ட டெண்டர்களையும் ரத்து செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் ஊரக வளர்ச்சி பணிகளுக்கு புதிதாக டெண்டர் விட்டு பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மாவட்ட ஊராட்சி செயலா ளரிடம் தீர்மானம் தொடர் பாக மனுவும் அளிக்கப் பட்டது.

இதேபோல், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

தார்சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரிமுருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், வத்தலக்குண்டு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story