100 நாள் வேலை திட்டம்: நரிக்குடி யூனியனில் ரூ.31 லட்சம் முறைகேடு - விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு


100 நாள் வேலை திட்டம்: நரிக்குடி யூனியனில் ரூ.31 லட்சம் முறைகேடு - விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Feb 2020 5:15 AM GMT (Updated: 6 Feb 2020 5:00 AM GMT)

நரிக்குடி யூனியனில் உள்ள ஆண்டியேந்தல் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்ட நிதியில் ரூ.31 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் கிராமங்களில் மத்திய-மாநில அரசின் நிதியுதவியுடன் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 13 சதவீதம் குறைத்து விட்டது.

ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில், பல கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்டம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், வேலை செய்த நாட்களுக்கு ஊதிய பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும் பயனாளிகள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பும், கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தும் நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு நிதியாண்டிக்கான திட்ட செலவுகளை சமூக தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நரிக்குடி யூனியனில் உள்ள ஆண்டியேந்தல் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்ட நிதியில் ரூ.51 ஆயிரத்து 382 நேரடியாகவும், ரூ.30 லட்சத்து 59 ஆயிரத்து 946-ஐ வேறு திட்டப்பணிகளுக்கு மாற்றம் செய்தும் என மொத்தம் ரூ.31 லட்சத்து 11 ஆயிரத்து 328 முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் பஞ்சாயத்து செயலர் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் கண்ணன், ஆண்டியேந்தல் பஞ்சாயத்து 100 நாள் வேலை திட்ட நிதிகணக்கினை முழுமையாக ஆய்வு செய்து முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி.யும், மாவட்டத்தில் 11 யூனியன்களிலும் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளிலும் கடந்த 3 நிதியாண்டுகளில் நடந்த 100 நாள் வேலை திட்ட செயல்பாடு குறித்து முழு ஆய்வு செய்து முறைகேடுகள் இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story