கிராமப்புறங்களில் படித்தாலும் திறமையானவர்களாக உயரலாம், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற பெண் பேச்சு


கிராமப்புறங்களில் படித்தாலும் திறமையானவர்களாக உயரலாம், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற பெண் பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2020 10:45 AM IST (Updated: 6 Feb 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் படித்தாலும் திறமையானவர்களாக உயரமுடியும் என்று குரூப்-1 தேர்வில் பெற்றி பெற்ற திருவாடானையை சேர்ந்த ராஜ பிருந்தா பேசினார்.

தொண்டி,

திருவாடானை பாரதிநகரில் ராஜன் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ராஜபிருந்தா குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் துணை சூப்பிரண்டாக தேர்வாகியுள்ளார். அதைதொடர்ந்து அவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர்கள் அரசூர் வீரப்பன், வக்கீல் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி துணை முதல்வர் சுகந்தி வரவேற்றார். விழாவில் ராஜ பிருந்தாவிற்கு பள்ளி தாளாளர் அருள் நிர்மலா செல்வராஜ் பள்ளியின் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் பாராட்டி பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜ பிருந்தா பேசியதாவது:- இந்த பள்ளியில் படித்து அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்த எனக்கு பள்ளியின் சார்பில் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நகர்ப் புறங்களில் படித்தால் மட்டுமே நல்ல வாழ்க்கை கிடைக்கும், அறிவாளிகளாக இருப்பார்கள் என்று எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் படித்து நல்ல திறமை உள்ளவர்கள் என்னை போன்று ஏராளமானவர்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் படித்தாலும் சாதனை படைக்க முடியும்.

இளம் வயதிலேயே நான் கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. அதற்கான முயற்சிகளையும் எடுத்தேன். பொறியியல் படித்து முடித்தவுடன் ஒரு வேலையை தேடிக்கொண்டு அதோடு நின்று விடாமல் எனது சிறுவயது எண்ணங்களை செயல்படுத்துவதற்காக குரூப் சர்வீஸ் தேர்வுகளை எழுதினேன். இப்போது போலீஸ் துணை சூப்பிரண்டாக உருவாகியுள்ளேன். விரைவில் கூடுதல் கலெக்டராக வெற்றி பெறுவேன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்த நான் இப்போது எப்படி சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேனோ, அதேபோல் கல்விக்கு முதலிடம் கொடுத்து நீங்களும் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும். தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்து மனக்கட்டுப்பாடுகளுடன் நேரத்தை கணக்கிட்டு நல்ல முறையில் படித்தால் வாழ்வில் நிச்சயம் ஜெயிக்க முடியும்.

இந்த பள்ளி மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளியாக வளர எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார். விழாவில் கல்லூர் ஊராட்சி தலைவர் கஸ்தூரி சுப்பிரமணியன், துணை தலைவர் சசிகலா மூர்த்தி, வார்டு உறுப்பினர் சந்திரா, பள்ளி சேர்மன் சவரிராஜ், முதல்வர் சசிகலா, வனிதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகளின் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

Next Story