அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க தர்ணா
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடந்தது.
திருப்பூர்,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் நேற்று காலை தொடர் முழக்க தர்ணா போராட்டம் தொடங்கியது.
அங்கு தனித்தனியாக பந்தல் அமைக்கப்பட்டு ஆண்களும், பெண்களும் இந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பல்வேறு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் மஜீத், துணைத்தலைவர் பஷீர்அகமது, பொதுச்செயலாளர் முகமது யாசர், பொருளாளர் தஸ்தகீர் மற்றும் முஸ்தபா, அம்சா(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஹபிபுர்ரகுமான்(பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா), அபுசாலிக்(ம.ம.க.), நஸ்ரூதீன் (த.மு.மு.க.), ஹாரிஸ் பாபு(எஸ்.டி.பி.ஐ.), அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது பெரிய பள்ளிவாசல் பொருளாளர் பைசல் அகமது நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுவரை அவர் அறிக்கை மூலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் உள்ளார். இனியும் எதுவும் தெரிவிக்காவிட்டால் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’ என்றார். பின்னர் மாலையில் போராட்டம் நிறைவடைந்தது.
இன்று(வியாழக்கிழமை) காங்கேயம் ரோடு புதூர் பிரிவில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story