நாகர்கோவிலில் இலவச செயற்கை கால் பொருத்தும் முகாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் இலவச செயற்கை கால் பொருத்தும் முகாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:11 AM IST (Updated: 6 Feb 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இலவச செயற்கை கால் பொருத்தும் முகாமை, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் மற்றும் ஜெய்ப்பூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால் பொருத்தும் முகாம் தொடக்க விழா நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நாகர்கோவில் சங்க தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட ரோட்டரி கவர்னர் சேக் சலீம் முகாம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த முகாம் 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முகாமில் குமரி மாவட்டத்தினர் மட்டுமின்றி, திருவனந்தபுரம், மலப்புரம் (கேரளா), தஞ்சாவூர், தேனி, வத்தலக்குண்டு, திருநெல்வேலி மற்றும் பல இடங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெற்று பயன் அடைகிறார்கள்.

இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஊனத்தை மறந்து, நம்மில் ஒருவராக வலம் வரும்போது அது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதோடு, அவர்களுடைய மன ஊனமும் அகலும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த முகாமில் ஏற்கனவே பதிவு செய்த 150 மாற்றுத்திறனாளிகளுக்கு கால்கள் அளவெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து அந்தந்த அளவுக்கு ஏற்ப இந்த முகாமிலேயே ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை மதிப்புள்ள செயற்கை கால்கள் வழங்கப்படும் என்றும், முகாம் நாட்களில் புதிதாக வந்து பதிவு செய்பவர்களுக்கு அடுத்து நடைபெறும் முகாமில் இலவசமாக செயற்கை கால்கள் வழங்கப்படும் என்றும் ரோட்டரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், சமூக சேவை இயக்குனர் சி.என்.செல்வன், முகாம் தலைவர் பிதலிஸ் பிஜூ, முன்னாள் மாவட்ட கவர்னர்கள் ரிச்சர்ட் கீரின், நிஜல்பார்ன்பீல்டு, டாக்டர் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Next Story