3 மாவட்ட விவசாய பாசனத்துக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


3 மாவட்ட விவசாய பாசனத்துக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Feb 2020 11:17 AM IST (Updated: 6 Feb 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

3 மாவட்ட விவசாய பாசனத்துக்காக சாத்தனூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்டராம்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது புறகால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி நேற்று தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிரு‌‌ஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் செல்வராஜூ (சாத்தனூர் அணை), மதுசூதனன் (தென்முடியனூர்), பி.ராஜே‌‌ஷ் (வாணாபுரம்), முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இன்று (நேற்று) முதல் சாத்தனூர் அணையில் இருந்து 7,543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே 302.40 மில்லியன் கன அடி மற்றும் 453.60 மில்லியன் கனஅடி ஆக மொத்தம் 756 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அடுத்த மாதம் (மார்ச்) 10-ந் தேதி வரை 35 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேலும், திருக்கோவிலூர் அணைக்கட்டு பெண்ணையாறு பாசன பழைய ஆயக்கட்டிற்கு 5 ஆயிரம் ஏக்கருக்கு 2-ம் போக சாகுபடிக்கு 1,200 மில்லியன் கன அடி நீரினை நீர்ப்பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் மாதம் வரை விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒரே தவணையில் தேவைப்படும்பொழுது தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.

இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 12,543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத் துறை) மூலம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய நீர்வள ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட பல்துறை வல்லுனர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட அணை பாதுகாப்பு ஆய்வு குழுவினர் கடந்த 29-ந் தேதி சாத்தனூர் அணையை ஆய்வு செய்தனர்.

அவர்கள் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரையறுத்து அதற்கான அறிக்கையினை பொதுப்பணித் துறையிடம் வழங்கி உள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தின் அணை பாதுகாப்பு ஆய்வுக்குழு அறிக்கையின்படி, சாத்தனூர் அணை மதகுகள், மின் கேபிள்கள், இடிதாங்கி, குடியிருப்பு கட்டிடங்கள் ஆகிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், பொதுப்பணித் துறை மூலம் தற்போது மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

சாத்தனூர் அணை சீரமைப்பதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய நீர்வள ஆணையத்தின் மூலம் உலக வங்கிக்கு சமர்பிக்கப்படவுள்ளது. உலக வங்கி நிதி வழங்கிய பின்பு சாத்தனூர் அணை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story