காவேரிப்பட்டணத்தில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், ரூ.1½ கோடியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் - அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்


காவேரிப்பட்டணத்தில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், ரூ.1½ கோடியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் - அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2020 6:30 AM GMT (Updated: 6 Feb 2020 6:48 AM GMT)

காவேரிப்பட்டணத்தில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்புள்ள புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பாக ரூ. 1 கோடியே 62 லட்சம் மதிப்பிலான புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி புதிய பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, முன்னாள் எம்.பி. அசோக்குமார், முன்னாள் அமைச்சர் பாலகிரு‌‌ஷ்ணரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சி.வி. ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் பி.டி. சுந்தரேசன், துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி, ஒன்றிய குழு தலைவர் பையூர் பெ.ரவி மலையண்ட அள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிரு‌‌ஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து 1,802 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள பயிர் கடன் மற்றும் தொழில்கடன் உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை எளிய பெண்கள் மற்றும் நடுத்தரகுடும்பத்தினரின் வாழ்வாதாரம் உயர்வதற்காக பெண்களை மையப்படுத்தியே எண்ணற்ற திட்டங்களான விலையில்லா ஆடுகள், கறவைபசுகள், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம், அம்மா பரிசு பெட்டகம், போன்ற திட்டங்களும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கனிணி, கல்வி உபகரணங்கள் போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது.

ஓரே ஆண்டில் மட்டும் தமிழக அரசு 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. எனவே விவசாயிகள் மகளிர் குழுவினர் கூட்டுறவு துறை சார்பாக நலத்திட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டுறவு துறை மேலாண்மை இயக்குனர் ரேணுகா, இணைப் பதிவாளர்கள் சந்தானம், ராமதாஸ், இந்தியன் ஆயில் நிறுவனம் முதன்மை மண்டல சில்லரை விற்பனை மேலாளர்கள் சிவகுமார், மாரீஸ்வரி, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.எம்.மாதையன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

Next Story