தலைவாசல் அருகே கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
தலைவாசல் அருகே கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார், என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
தலைவாசல்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் பெரியேரி ஊராட்சி வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்தும், விழா நடைபெறும் இடத்தையும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவ பணிகளின் இயக்குனர் ஞானசேகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொ) அருளரசு, சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்விற்கு பிறகு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) தலைவாசல் கால்நடை பூங்கா வளாகத்தில் தெற்காசியாவிலேயே சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.
கால்நடை பூங்கா இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் மேலை நாடுகளிலிருந்தும் கூட இங்கு வருகை தந்து படித்து இங்கேயே தங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆராய்ச்சி நிலையத்துடன் அமைக்கப்படவுள்ளது.
விழாவில் வருகிற 9-ந் தேதி 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். அதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கும் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களையும் இங்கே கொண்டு வர இருக்கின்றோம்.
வருகிற 10-ந்தேதி சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கால்நடைகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு கால்நடை கல்லூரிகளில் சேர்வது பற்றி எடுத்துரைக்க பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இங்கே வரவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வேளாண்மைத்துறையின் மூலமாக வேளாண்துறையைச்சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் வரவுள்ளனர்.
பொதுமக்கள் பார்ப்பதற்காக 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கால்நடை மருத்துவக்கல்லூரியானது இந்த ஆண்டே தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் ஆறுமுகப்பெருமாள், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மரு.புருஷோத்தமன், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, தலைவாசல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ராமசாமி, கால்நடை மருத்துவர்கள், பொதுப்பணித்துறை, வருவாய்துறை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story