பொறையாறு, செம்பனார்கோவில் பகுதியில், நெற்பயிர்களில் நோய் தாக்குதல் - விவசாயிகள் கவலை
பொறையாறு, செம்பனார்கோவில் பகுதியில் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிர்களில் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொறையாறு,
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் நெற்யிர்கள் செழிப்புடன் வளர்ந்தது. இந்தமுறை புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்படாததால் அதிகமாக மகசூல் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர்.
இந்தநிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய போதிய அளவு அறுவடை எந்திரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் உடனடியாக அறுவடைய செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் பொறையாறு, செம்பனார்கோவில், பரசலூர், காழியப்பநல்லூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, திருவிடைக்கழி, தில்லையாடி, விசலூர், கீழ்மாத்தூர், மேல்மாத்தூர், கொத்தங்குடி, விளாகம், திருவிளையாட்டம், நல்லாடை, நரசிங்கநத்தம், நத்தம், கீழையூர், கருவாளக்கரை, கஞ்சாநகரம், ஆறுபாதி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கியும், அறுவடை செய்த வயல்களில் வைக்கோல் கட்டும் பணியையும் செய்து வருகின்றனர். காழியப்பநல்லூர், கொத்தங்குடி, அரசூர் போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிரில் புகையான், குலை நோய் தாக்க ஆரம்பித்தது.
இதனால் நெற்பயிர்கள் மற்றும் கதிர்கள் சிவந்த நிறத்தில் காணப்படுகிறது. சில வயல்களில் புதியவகை நோய் தாக்கி உள்ளது. இந்த நோய் தாக்குதல் காரணமாக நெற்கதிர்கள் கருத்தும், நெல் மணிகள் உதிர்ந்தும் காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொறையாறு அருகே கண்ணப்பமூலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் சொக்கலிங்கம், கருணாகரன், பழனிவேல், காளிதாஸ் ஆகியோர் கூறியதாவது:-
இந்த ஆண்டு சம்பா நெற்பயிர்கள் நன்கு விளைந்து அதிக மகசூல் தரும் என்று எதிர்பார்த்த நிலையில் அறுவடை எந்திரம் கிடைக்காததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை வயலிலேயே விட்டு வைத்தோம்.
இந்தநிலையில் புதியவகை நோய் நெற்பயிர்களை தாக்கி வருவதால் நெல்மணிகள் கருத்த நிறத்தில் மாறி, கதிர்கள் உதிர தொடங்கி விட்டது. அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் நெற்கதிர்கள் மீது எந்தவொரு மருந்தும் தெளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த நோயை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story