தோவாளை ஊராட்சி கூட்டத்தில் தலைவர், உறுப்பினர்கள் திடீர் போராட்டம்
தோவாளை ஊராட்சி கிராம வளர்ச்சி சிறப்பு கூட்டம் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையிலும், துணை தலைவர் தாணு முன்னிலையிலும் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி,
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சந்தியா, வித்யலெட்சுமி, சிவகாமி, ஆறுமுகம் பிள்ளை, ராமலெட்சுமி, மணிகண்டன், இசக்கிமுத்து, சரஸ்வதி மற்றும் சமூக நலத்துறை பிரதிநிதியாக மரிய பிரபா, ஊராட்சி பொறுப்பாளர் புஷ்பரதி, கால்நடை மருத்துவர் பெபின் சினியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் உறுப்பினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கு வரவில்லை. ஊராட்சியில் இதுவரை எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. அவர் வந்த பிறகு பேசி முடிவுக்கு வரலாம் என அரசு அதிகாரிகளிடம் கூறி தரையில் அமர்ந்தனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் கூறுகையில், தோவாளை ஊராட்சியை பொறுத்தமட்டில் ஊராட்சி செயலாளர் இல்லாததால் அலுவலகம் சரியாக திறப்பது இல்லை. இதனால் பொதுமக்களுக்கு எந்த பணியும் செய்து கொடுக்க முடியவில்லை. மக்களின் அடிப்படை தேவை அதிகமாக உள்ளது. பதில் சொல்ல அதிகாரிகள் கிடையாது. பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரையிலும் ஊராட்சி தலைவருக்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை. எனவே அதிகாரி வரவை எதிர்நோக்கி காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
இதற்கிடையே அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கர்சால், தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story