ரூ.1½ கோடியில் அப்துல்லாபுரம்- ஆலங்காயம் மாற்றுச்சாலை ; அதிகாரிகள் ஆய்வு
விமான நிலையத்தையொட்டி ரூ.1 கோடியே 60 லட்சத்தில் அப்துல்லாபுரத்தில் இருந்து ஆலங்காயத்துக்கு செல்ல மாற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனை சென்னை விமான போக்குவரத்து ஆணையரக உதவி பொதுமோலாளர் கீர்த்திராஜன், வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வேலூர்,
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.35 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தில் 20 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 800 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் மற்றும் சிக்னல் மையம் அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் கவுண்ட்டர், பயணிகள் சோதனை அறை, அலுவலகம் மற்றும் உணவகம் ஆகியவை அடங்கிய டெர்மினல் கட்டிடம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அப்துல்லாபுரத்தில் இருந்து ஆலங்காயம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் ஒருபகுதி விமான நிலையத்தின் வழியாக செல்கிறது. இந்த சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து விட்டு, அதற்கு பதிலாக விமான நிலையத்தையொட்டி மாற்றுச்சாலை அமைப்பது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. அதனால் விமான நிலைய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அப்துல்லாபுரம்-ஆலங்காயம் சாலையின் ஒருபகுதியை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பாகவும், அதற்கு பதிலாக மாற்றுச்சாலை அமைப்பது தொடர்பாகவும் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் விமான நிலையத்தின் வழியாக செல்லும் அப்துல்லாபுரம்-ஆலங்காயம் சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைப்பது எனவும், அதற்கு மாற்றாக விமான நிலையத்தையொட்டி மாற்றுச்சாலை சுமார் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பது என்று முடிவானது.
இந்த நிலையில் விமான நிலையத்தையொட்டி அப்துல்லாபுரம்- ஆலங்காயம் மாற்றுச்சாலை அமையும் இடத்தை சென்னை விமான போக்குவரத்து ஆணையரக உதவி பொதுமேலாளர் கீர்த்திராஜன், மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாற்றுச்சாலை அமையும் இடங்கள் அளவீடு செய்யப்பட்டது. அதனை அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, வேலூர் விமான நிலைய மேலாளர் மாயப்பன் மற்றும் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், விமான நிலையத்தின் அருகேயுள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி, மின்கம்பம் அகற்றப்பட உள்ளன.
அதைத்தொடர்ந்து விமான நிலையத்தையொட்டி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 12 மீட்டர் அகலம், 7 மீட்டர் உயரத்துக்கு தார்சாலை அமைக்கப்படும். சாலை அமையும் இடத்தில் இடையூறாக காணப்படும் விமானநிலைய தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டு, அதன்பின்னர் மண் சமப்படுத்தப்பட்டு வாகனங்கள் இயக்கி சோதனை செய்யப்படும். அதைத்தொடர்ந்து நிதி ஒதுக்கியவுடன் தார்சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story