ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் தொழில்தொடங்க ரூ.1 கோடி கடன் உதவி
ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் தொழில் தொடங்க வி.ஐ.டி. மற்றும் இந்தியன் வங்கி சார்பில் ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
வேலூர்,
வி.ஐ.டி. நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக கிராம வள மையங்களை ஏற்படுத்தி மலைவாழ் மக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்து வருகிறது .
இந்த ஆண்டுக்கான ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் தொழில் தொடங்க பொருளீட்டு கடன் மற்றும் விவசாய கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஜமுனாமரத்தூர் வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கி தொழில் முனைவோருக்கான அடிப்படை கோட்பாடுகளை எடுத்துரைத்தார்.
வி.ஐ.டி. நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மைய உதவி இயக்குனர் சி.ஆர்.சுந்தரராஜன் வரவேற்று, மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே. எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு மலைவாழ் மக்கள் தொழில் தொடங்க இந்தியன் வங்கி மூலம் 30 கூட்டுப்பொறுப்பு குழு மற்றும் உழவர் மன்றங்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வழங்கி பேசினார்.
மேலும் புதுடெல்லி தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் மற்றும் வி.ஐ.டி. இணைந்து நடத்திய தேன் மதிப்புக்கூட்டல் செயல்முறை பயிற்சியில் கலந்துகொண்ட 40 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் வி. ஸ்ரீராம், இந்தியன் வங்கி மண்டல மேலாளர ராஜாராமன், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசன், ஜமுனாமரத்தூர் ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி, கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.எஸ்.ஆர்.டி திட்ட இணையர் பாபு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story