தரவரிசை பட்டியலில் வேலூர் சிறப்பான இடத்தை பிடிக்க அனைவரும் கருத்தை பதிவு செய்ய வேண்டும் ; மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் வேலூர் மாநகராட்சி சிறப்பான இடத்தை பிடிக்க பொதுமக்கள் அனைவரும் தங்களின் கருத்தை சமூகவலைதளங்களின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
வேலூர்,
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வாழ்வாதார அமைச்சகத்தின் மூலம் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களில் வேலூர் உள்பட 111 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம், வசதி குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.
தரவரிசை பட்டியலில் சிறப்பான இடத்தை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகர்நல அலுவலர் மணிவண்ணன், பொறியாளர் சீனிவாசன், உதவி கமிஷனர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் வேலூர் மாநகராட்சி சிறப்பான இடத்தை பிடிக்க சமூக வலைதளங்களில் அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்காக vellore@ease0fliving2019 மற்றும் யு.ஆர்.எல்.பார்கோடு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் தொடர்பான கணக்கெடுப்பு சமூக வலைதளத்தில் குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட 24 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அவை அனைத்துக்கும் உரிய பதில் அளிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அளிக்கும் கருத்துகள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். எனவே மாநகராட்சி ஊழியர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் மற்றவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story