முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 6 Feb 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை வனப்பகுதியில் ரோந்து செல்ல வனத்துறையினரின் உதவிக்கும், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்டவும், சுற்றுலா பயணிகளை சவாரியாக அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது போலவே தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

உணவு பொருட்கள்

முன்னதாக வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு, அங்குள்ள உணவு கூடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் அங்குள்ள விநாயகர் கோவிலில் நடந்த பூஜையில் கிரி மற்றும் கிரு‌‌ஷ்ணா என்ற 2 யானைகள் கலந்துகொண்டன. மேலும் கோவிலை 3 முறை சுற்றி வந்து, சாமி தரிசனம் செய்தன. இதையடுத்து முகாமில் கலந்துகொள்ளும் யானைகளுக்கு பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. மேலும் சத்தான உணவுகளும், பசுந்தீவனங்களும், சத்து மாத்திரைகளும், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. முகாம் நடைபெறும் 48 நாட்களுக்கும் யானை சவாரி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கு பிறகு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூரிய மின்வேலி

முதுமலையில் 27 யானைகள், ஆனைமலை டாப்சிலிப்பில் 27 யானைகள், சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 யானைகள், கோவை சாடிவயலில் 2 யானைகள், திருச்சியில் 4 யானைகள் என தமிழகம் முழுவதும் 62 வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இதற்கு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புத்துணர்வு முகாம் நடத்துவதால், வளர்ப்பு யானைகளின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகள் வெட்டப்பட்டு வரும் நிலையில், அதனை சுற்றி புதிய தொழில்நுட்பத்தில் சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களது குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதுமலையில் காலியாக உள்ள வன கால்நடை டாக்டர் பணியிடம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தமிழக வனத்துறை முதன்மை வன உயிரின பாதுகாவலர் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story