வண்டலூர் பூங்காவில் யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம்


வண்டலூர் பூங்காவில்   யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் பூங்காவில் யானைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

வண்டலூர்,

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக உயிரியல் பூங்காக்கள், மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு யானைகள் முகாம்களில் உள்ள யானைகளுக்கு அனைத்து வகை சத்துகளும் அடங்கிய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் கொடுத்து அவற்றின் உடல் நலத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சிறப்பு புத்துணர்வு முகாமை செயல்படுத்தி வருகிறது.

48 நாட்களுக்கு...

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் இந்த முகாம் நேற்று தொடங்கியது. பூங்காவில் உள்ள ரோகிணி மற்றும் பிரக்குருதி ஆகிய 2 பூங்கா யானைகளுக்கு நேற்று முதல் அடுத்த மாதம் 24-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. சிறப்பு புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் பூங்கா யானைகளுக்கு தினசரி வழங்கப்படும் உணவுகளுடன் பூங்கா கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி செறிவூட்டப்பட்ட புரதம், கனிமம் மற்றும் நுண் சத்துகள் நிறைந்த சிறப்பு உணவுகள் இந்த முகாம் நடைபெறும் நாட்களில் வழங்கப்படும்.

இவை தவிர யானைகள் மிகவும் விரும்பி உண்ணும் கரும்பு, வாழைமரம், தேங்காய், அரச மற்றும் ஆல இலைகள் ஆகியவைகளும் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

சிறப்பு உணவுகளை...

இந்த சிறப்பு புத்துணர்வு முகாமை இந்த பூங்காவின் உதவி இயக்குனர் சேகர் தொடங்கி வைத்தார். பூங்கா அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் யானைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவுகளை இந்த முகாம் நடைபெறும் நாட்களில், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரடியாக யானைகள் இருப்பிடத்தில் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story