நெல்லையில் பயங்கரம்: தாய் அடித்துக்கொலை பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் இருந்த ரெயில்வே ஊழியர் கைது


நெல்லையில் பயங்கரம்: தாய் அடித்துக்கொலை பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் இருந்த ரெயில்வே ஊழியர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தாயை அடித்துக்கொன்று விட்டு, பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் இருந்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரம் ஆபுத்திரன் தெருவை சேர்ந்தவர் வானமாமலை. இவரது மனைவி விமலா (வயது 70). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வானமாமலை ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அவர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டார். கருணை அடிப்படையில் அவரது வேலை கடைசி மகனான அகிலன் (வயது 50) என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர் விருதுநகரில் ரெயில்வே ஊழியராக வேலை செய்து வந்தார். அகிலனுக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு 4 முறை திருமணம் ஆகி அனைவரும் விவாகரத்து பெற்றனர். இதனால் அகிலன் தனது தாய் விமலாவுடன் விருதுநகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அகிலனுக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அகிலன் பணிக்கு செல்லாமல் விருதுநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் விமலாவுக்கு சொந்தமாக அடுத்தடுத்து 4 வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இந்த வாடகையை வசூல் செய்வதற்காக அகிலனும், தாய் விமலாவும் பாளையங்கோட்டைக்கு மாதம் ஒரு முறை வந்து இங்குள்ள ஒரு வீட்டில் தங்குவார்கள்.

வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகையை வசூல் செய்வதற்காக அகிலனும், தாய் விமலாவும் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். விமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் ஒரு இரும்பு கம்பி கிடந்தது. அதன் அருகே அகிலன் அமர்ந்து இருந்தார்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உதவி போலீஸ் கமிஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், விமலா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அருகே உட்கார்ந்து இருந்த அகிலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, சமாதானபுரத்தில் உள்ள வீடுகளில் வாடகை வசூல் செய்வதற்காக விமலாவும், அகிலனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென்று அகிலனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அகிலன், தாய் விமலாவை இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த விமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகராறில் அகிலனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பியது தெரியவந்தது.

மேலும், இறந்து கிடந்த தாய் விமலா உடலுடன் அகிலன் கடந்த 2 நாட்களாக வீட்டில் தங்கியிருந்த அதிர்ச்சி தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த பயங்கர கொலை சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story