எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கம் 10 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிய மந்திரிகளாக 10 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்றது.
15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
‘ஆபரேஷன் தாமரை’ மூலம் அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.
சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள். இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதாக முதல்-மந்திரி எடியூரப்பா உறுதியளித் தார்.
போர்க்கொடி தூக்கினர்
அதன்படி நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 6-ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்றும், 13 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 10 பேர், மூத்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
சி.பி.யோகேஷ்வர், கர்நாடக சட்டசபையிலோ அல்லது மேல்-சபையிலோ உறுப்பினராக இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலில் தோல்வி அடைந்தவருக்கு மந்திரி பதவியா? என்று பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொதித்தெழுந்தனர். அவருக்கு பதிலாக கல்யாண-கர்நாடக பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.
புதிய மந்திரிகள் பதவிப்பிரமாணம்
இது எடியூரப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கினால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்ததை மேலிட தலைவர்கள் உணர்ந்தனர். இதையடுத்து பா.ஜனதா மேலிட தலைவர்கள், மந்திரிசபை விரிவாக்கத்தின்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 10 பேருக்கு மட்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், மற்ற 3 பேருக்கு மந்திரி பதவி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எடியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டனர்.
அதைத்ெதாடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, மந்திரிசபை விரிவாக்கத்தின்போது இடைத்தேர்தலில் வென்ற 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று அறிவித்தார். இதனால் மந்திரி பதவி கனவில் இருந்த உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் ஆகியோர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம், அதாவது புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா பெங்களூரு கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று நடைபெற்றது. சரியாக காலை 10.30 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்ச்சி தொடங்கியது.
குழு புகைப்படம்
முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில், எம்.எல்.ஏ.க்கள் 1. எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம் தொகுதி), 2. ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), 3. ஆனந்த்சிங் (விஜயநகர்), 4. கே.சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), 5. பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), 6. சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), 7. பி.சி.பட்டீல் (இரேகெரூர்), 8. கே.கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), 9. நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), 10. ஸ்ரீமந்த்பட்டீல் (காக்வாட்) ஆகிய 10 பேர் இறைவன் பெயரில் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலாவும், முதல்-மந்திரி எடியூரப்பாவும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய மந்திரிகள் அனைவரும் எடியூரப்பாவின் காலில் விழுந்து வணங்கினர். 10.30 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு விழா 30 நிமிடங்களில் நிறைவடைந்தது. அதாவது காலை 11 மணிக்கெல்லாம் முடிவடைந்து விட்டது. அதைத்தொடர்ந்து புதிய மந்திரிகள் கவர்னர் மற்றும் முதல்-மந்திரியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தள்ளுமுள்ளு
இந்த விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண்சவதி, மந்திரிகள் சி.டி.ரவி, ஆர்.அசோக், சுரேஷ்குமார் மற்றும் புதிய மந்திரிகளின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மந்திரி பதவி ஏற்றவர்களில் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 2 பேரை தவிர, மற்ற 8 பேரும் மந்திரிசபைக்கு புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி ஏற்பின்போது, எடியூரப்பா தனது முகத்தை இறுக்கமாக ைவத்திருந்தார். அவரது முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லை.
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்பவன் ரோட்டில் நேற்று காலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கவர்னர் மாளிகைக்குள் அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அழைப்பிதழ் இல்லாதவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். மந்திரிகள் பதவி ஏற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகையின் முன்புறத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திரைப்பட கதாநாயகன்
புதிய மந்திரிகளில் பி.சி.பட்டீல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அவர் பல்வேறு கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மந்திரி பதவி ஏற்றவர்களில் எஸ்.டி.சோமசேகர், நாராயணகவுடா, கே.கோபாலய்யா, கே.சுதாகர் ஆகிய 4 பேரும் ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர்கள். பி.சி.பட்டீல் லிங்காயத் சமூகத்தையும், ரமேஷ் ஜார்கிகோளி வால்மீகி சமூகத்தையும், சிவராம் ஹெப்பார் பிராமண வகுப்பையும், பசவராஜ் குருப சமூகத்தையும், ஆனந்த்சிங் ராஜ்புத் சமூகத்தையும், ஸ்ரீமந்த் பட்டீல் மராட்டிய ஜெயின் சமூகத்தையும் சேர்ந்தவர்கள். இதில் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றதின் மூலம் மந்திரிசபையின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. மந்திரிசபையில் இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன. மிக விரைவில் அந்த 6 இடங்களும் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story