மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5,600 கோடி மத்திய அரசு ஒதுக்கியது
மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் 508.17 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புல்லட் ரெயில் திட்டப்பணிகளை தேசிய அதிவேக ரெயில் கழகம் மேற்கொள்கிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் புல்லட் ரெயில் திட்டத்தை முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
இந்தநிலையில், கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தேசிய அதி வேக ரெயில் கழகம் தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் பங்களிப்பை தவிர, இந்த திட்டத்தில் நான்கில் ஒரு பங்கு வைத்திருக்கும் மராட்டியம் மற்றும் குஜராத் மாநில அரசுகளிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியாண்டில், இரு மாநிலங்களும் மொத்தமாக ரூ.1,000 கோடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராம் தனது பட்ஜெட் உரையில், மும்பை மற்றும் ஆமதாபாத் இடையேயான அதிவேக ரெயில் திட்டத்துக்கு தீவிர முனைப்பு காட்டப்படும் என கூறினார்.
உத்தவ் தாக்கரேயின் எதிர்ப்பு
அதே நேரத்தில் புல்லட் ரெயில் திட்டத்துக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் யார் பயன் அடைவார்கள்?. மராட்டியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இந்த திட்டம் எப்படி உத்வேகம் அளிக்கும்? என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, இந்த ரெயில் திட்டத்தை வெள்ளை யானையுடன் ஒப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story