காலணியை கழற்ற வைத்த விவகாரம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது ஆதிவாசி சிறுவன், போலீசில் புகார்


காலணியை கழற்ற வைத்த விவகாரம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது ஆதிவாசி சிறுவன், போலீசில் புகார்
x
தினத்தந்தி 7 Feb 2020 8:00 AM IST (Updated: 7 Feb 2020 7:13 AM IST)
t-max-icont-min-icon

காலணியை கழற்ற வைத்த விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது ஆதிவாசி சிறுவன் போலீசில் புகார் அளித்தான்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொள்ள தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்தார். அப்போது தான் அணிந்திருந்த காலணியை, அங்கிருந்த ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து கழற்ற வைத்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. எனினும் தனது செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தன்னை காலணியை கழற்ற வைத்த அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சிறுவன், உறவினர்களுடன் மசினகுடி போலீசில் புகார் அளித்தான். புகாரை ஏற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் சகாதேவன் மற்றும் நிர்வாகிகள், ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து நீலகிரி பழங்குடியினர் இருளர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது. இது தீண்டாமை ஒழியவில்லை என்பதையும், அறியாமையில் உள்ள மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை கொண்டு இருப்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது. அவரது செயல் வேதனைக்குரியதாக இருப்பதுடன் பழங்குடியின மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அவர் மீது மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம், நீதிமன்றங்கள் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல் இனிமேலும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர், கவர்னர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story