வருமான வரித்துறையின் நெருக்கடியால் நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார் - கே.எஸ்.அழகிரி பேட்டி
வருமான வரித்துறை நெருக்கடியால் நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கம்பத்துக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தன்னுடைய ஒரு அங்கமாகிய வருமான வரித்துறையின் மூலம் நடிகர் விஜய் வீட்டில் சோதனையிட்டு உள்ளது. வருமான வரி சோதனை நடத்துவதை காங்கிரஸ் கட்சி தவறாக கருதவில்லை. வருமான வரி சோதனை நடத்துவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. ஆனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த அவரை ஏதோ குற்றவாளியை பிடித்து இழுத்து வருவதை போல கையோடு அழைத்து வந்து சோதனையிடுவது என்பது சரியானது அல்ல. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எச்.ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று கூறுகிறார். ஜோசப், முகமது என்று பெயர் வைத்திருப்பவர்கள், மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாதா?. இந்த நிகழ்வுகளை பார்க்கும் போது, எச்.ராஜா சொல்வதைத்தான், பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் செய்கின்றன.
வருமான வரித்துறையை வைத்து புகழ்பெற்ற நடிகரை மிரட்டுவது என்பதோ? அல்லது கைப்பாவையாக மாற்றுவது என்பதோ ஜனநாயகம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். நடிகர் ரஜினியை அப்படிதான் செய்துள்ளதாக தெரிகிறது. நடிகர் ரஜினிக்கு குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரியாது. வருமான வரித்துறையின் நெருக்கடியால் அதற்கு ஆதரவாக பேசுகிறார். பா.ஜ.க. இந்த தேசத்தில் எறும்பில் இருந்து யானை வரை தங்களுக்கு எதிராக சிந்தித்தாலும், செயல்பட்டாலும் அவர்களை தங்களது கைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஜனநாயக விரோத செயல்களை செய்து வருகின்றது. இதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னலில் அவர் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.பி.முருகேசன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன், காங்கிரஸ் நகர தலைவர் போஸ், தி.மு.க நகர பொறுப்பாளர் துரை நெப்போலியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story