மதிப்பெண் குறைவால் திட்டிய ஆசிரியையை மிரட்ட தூக்க மாத்திரையுடன் வந்த மாணவி - மாநகராட்சி பள்ளியில் பரபரப்பு


மதிப்பெண் குறைவால் திட்டிய ஆசிரியையை மிரட்ட தூக்க மாத்திரையுடன் வந்த மாணவி - மாநகராட்சி பள்ளியில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 11:55 AM IST (Updated: 7 Feb 2020 11:55 AM IST)
t-max-icont-min-icon

மதிப்பெண் குறைந்ததால் திட்டிய ஆசிரியையை மிரட்ட தூக்க மாத்திரையுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் மாநகராட்சி பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் மாநகர் பகுதியில் அதிக அளவில் பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் நிறுவனங்களில் கணவனும், மனைவியும் இரவு, பகல் என மாறி மாறி வேலைக்கு செல்வதால் தங்களது குழந்தைகளை அவர்களால் சரியாக பராமரிக்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவில் அருகே உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் பெருமளவில் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவிகள் பள்ளிக்கு வரும்போதே மிகவும் சோர்வாகவும், காலை உணவை சாப்பிடாமலும் வருவது உண்டு. இதன்காரணமாக அவர்கள் தங்களது கவனத்தை படிப்பில் தீவிரமாக செலுத்தமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பெற்றோர் மத்தியில் ஏற்படும் சண்டைகளால் மனதளவில் மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வக்கீல் ஒருவரை போய் சந்தித்துள்ளார். அப்போது தனது தாயாரை தந்தை மிகவும் மனரீதியாக கொடுமைப்படுத்தி வருவதாகவும், தனது தாய்க்கு விவாகரத்து வாங்கிக்கொடுக்கும் படியும் அந்த வக்கீலிடம் மாணவி மன்றாடியுள்ளார்.

மற்றொரு மாணவி தனது தந்தை தினமும் மது அருந்திவிட்டு வந்து தாயை அடித்து கொடுமைப்படுத்தி வருவதாக போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் சக மாணவி மூலம் தலைமை ஆசிரியைக்கு தெரியவந்தள்ளது.மற்றொரு மாணவியோ இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் திட்டிய வகுப்பு ஆசிரியையை மிரட்ட தூக்க மாத்திரையுடன் பள்ளிக்கு வந்துள்ளார். மேலும் இதுக்குமேல் ஏதாவது கூறினால் கையில் வைத்திருக்கும் 10 மாத்திரைகளையும் ஒரேயடியாக தின்று தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதில் சப்தநாடியும் அடங்கிப்போன சம்பந்தப்பட்ட ஆசிரியை, தலைமை ஆசிரியையிடம் சென்று கண்ணீர் விட்டு கதறி உள்ளார். இது பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியைகளை மதிப்பதில்லை என்றும், அதிக நேரம் செல்போன் பார்ப்பதோடு, உடல்நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்றும், காதல் பிரச்சினை, மனஉளைச்சல் போன்றவற்றில் சிக்கித்தவிப்பதாகவும் பல்வேறு புகார்கள் பள்ளி நிர்வாகத்திற்கு வந்தன. எனவே, மாணவிகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்து செல்வதற்காக அவர்களுக்கு ஆலோசனை வழங்கிட பள்ளிநிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குடும்பநல ஆலோசனை மையம் சார்பில் நேற்று மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் குடும்ப நல ஆலோசகர்கள் பிரியாமேரி, சண்முகபிரியா, பிரமிளா சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

அப்போது மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரக்கூடாது. இந்த பருவத்தில் நீங்கள் எந்த வித தவறான எண்ணங்களும் தோன்றாத வகையில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தவிர உடல் நலனை அவசியம் பேணி காக்க வேண்டும் என்றும் உங்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் ஆசிரியர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதே போல பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் முன் சண்டை போட்டுக்கொள்ளக்கூடாது. தினசரி இரவு 7 மணி முதல் 9 மணி வரை உங்கள் பிள்ளைகளுடன் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். காலை முதல் மாலை வரை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள், பள்ளிக்கு சென்று வரும் வழியில் நடக்கும் நிகழ்ச்சிகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் பிள்ளைகள் நேராக பள்ளிக்குதான் செல்கிறார்களா? மாலையில் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வருகிறார்களா? அவர்கள் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் மாணவிகளின் பிரச்சினை ஓரளவாவது குறையும் என்று வலியுறுத்தினர். 

Next Story