காலஅவகாசம் முடிந்ததால், கடைகளை காலி செய்யும் வியாபாரிகள் - காமராஜ் மார்க்கெட் இடமாற்றம்
காலஅவகாசம் முடிந்ததால் தஞ்சை பகுதியில் கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகின்றனர். காமராஜ் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிக இடத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை அரண்மனை அருகே உள்ள காமராஜ் மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லறை விற்பனை கடைகள் 212-ம் உள்ளன. இது தவிர தரைக்கடைகளும் உள்ளன. தஞ்சையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் காமராஜ் மார்க்கெட் ரூ.17 கோடியில் புதிதாக 17 ஆயிரத்து 225 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகிறது.
குடிநீர் வசதி, ஏ.டி.எம். வசதி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதியும் மார்க்கெட்டில் அமைய உள்ளது. புதிய மார்க்கெட் கட்டப்பட உள்ளதால் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள காவேரிநகரில் அமைந்துள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் தற்காலிகமாக காமராஜ் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் காமராஜ் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிக இடத்தில் செயல்பட உள்ளது.
அதேபோல் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் நடைபெற உள்ள தஞ்சை தெற்குஅலங்கம் ராஜராஜன்வணிக வளாகம், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள், ராஜப்பாபூங்காவின் வெளிப்புற கடைகளை மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
ஆனால் பெரியகோவில் குடமுழுக்கு முடியும் வரை கடைகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நேற்றுவரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. காலஅவகாசம் முடிவடைந்ததையொட்டி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று கடைகளை காலி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து வியாபாரிகள் தாங்களே முன்வந்து கடைகளை காலி செய்து வருகின்றனர். கடைகளை வியாபாரிகள் காலி செய்கிறார்களா? என இரவு நேரத்தில் நேரில் சென்று மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். கடைகளை காலி செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story