கிருஷ்ணராயபுரத்தில், ஜீப் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கிருஷ்ணராயபுரத்தில் ஜீப் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
திருச்சி எடமலைப் பட்டிபுதூரை சேர்ந்த ஒரு தனியார் ஆயில் டீலர் நிறுவனத்தை சேர்ந்த டிரைவர் குருமூர்த்தி(வயது 27), ஊழியர்கள் பிரபாகரன், ஜம்புலிங்கம், அருளரசு ஆகிய 4 பேர், ஒரு ஜீப்பில் கரூருக்கு வந்துவிட்டு நேற்று மாலை திருச்சிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணராயபுரம் முருகன் கோவில் அருகே வந்தபோது ஜீப்பின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைக்கண்ட டிரைவர், ஜீப்பை நிறுத்திவிட்டு, அதில் இருந்து இறங்கிச்சென்று பார்த்தார். அப்போது என்ஜின் இருந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஜீப்புக்குள் இருந்தவர்களை கீழே இறங்குமாறு சத்தம்போட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கீழே இறங்கினர். இந்நிலையில் மளமளவென தீ பரவியதில், ஜீப் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் இது பற்றி முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஜீப் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜீப் தீப்பிடித்து எரிந்தது குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Related Tags :
Next Story