கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு தொடர்பான விளக்க கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு பணி தொடர்பான விளக்ககூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி மாவட்டம் தாயனூர் வரை சுமார் 62 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்த வாய்க்காலில் தமிழக அரசு சார்பில் ரூ.335.5 கோடி மதிப்பீட்டில் வாய்க்காலின் இடது மற்றும் கீழ்புறம் கான்கிரீட் மற்றும் வலது புறம் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் புனரமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் புனரமைப்பு பணி குறித்து பாசன விவசாயிகளுக்கான விளக்க கூட்டம், குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால் அதிக அளவில் விவசாயிகள் வந்த காரணத்தால் குளித்தலை காவிரிநகரில் உள்ள அண்ணா சமுதாய மன்றத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட திருச்சி செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்டளை மேட்டு வாய்க்காலில் புனரமைப்பு பணி மேற்கொள்வது குறித்து விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
அப்போது, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கரையோரம் உள்ள மரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இயற்கை வளங்களை அழித்து இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. வாய்க்காலில் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டால், வாய்க்கால் செல்லும் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்துவிடும். இதனால் குடிநீரின்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதேபோல் கிணறு மற்றும் ஆழ்குழாய்களில் நீரின்றி விவசாயமே செய்யமுடியாத நிலை ஏற்படும். விவசாயிகளை பாதிக்கக்கூடிய இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.
அப்போது கடைமடை விவசாயிகள் பேசுகையில், கட்டளைமேட்டு வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு சரியாக வருவதே இல்லை. இதனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கடைமடை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருகிறோம். எனவே இதுகுறித்து அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இது வரவேற்கக்கூடிய திட்டம் என்று தெரிவித்து, அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதனால் சில விவசாயிகள் கடைமடை விவசாயிகளின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள், விவசாயிகளை அமைதிப்படுத்திய பின்னர் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினார்கள். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், விவசாயிகளின் நிலை குறித்து அதிகாரிகள் தெரிந்து கொள்ளவில்லை. அதேபோல் அதிகாரிகளின் கருத்து குறித்து விவசாயிகளும் புரிந்து கொள்ளவில்லை. எனவே அனைவருக்கும் தெரியும் வகையில் கட்டளை மேட்டு வாய்க்காலில் மேற்கொள்ளவுள்ள புனரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும், என்றார்.
ஆற்றுபாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் பேசுகையில், தென்கரை வாய்க்கால் பாசனத்திற்கு சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது, என்று தெரிவித்தார். இதற்கு பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தாங்கள் விளைவித்த பயிர்கள் அறுவடை செய்யும் பருவத்திற்கு வரவுள்ள நிலையில் உள்ளது. மார்ச் மாதம் வாய்க்கால் புனரமைப்பு பணி மேற்கொண்டால் தண்ணீரின்றி பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுவதோடு விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இறக்கும்நிலை ஏற்படும், என்றனர். இதைக்கேட்ட அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கையின்படி ஏப்ரல் மாதம் இப்பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள், எவ்வாறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, வாய்க்காலின் கீழ்புறம் 3 இன்ச் அளவிற்கு எந்திரம் மூலம் கான்கிரீட் போடப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக்கேட்ட விவசாயிகள், வீட்டு மேற்கூரையின் கான்கிரீட் 4 இன்ச் அளவில் இருக்கும்பட்சத்தில், அதற்கும் குறைவான உயரத்தில் வாய்க் காலில் கான்கிரீட் அமைத்தால் விரைவில் அது சேதமடைந்துவிடும். இதனால் இத்திட்டம் பயனற்ற திட்ட மாகும், என்று கூறி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். அப்போது அதிகாரிகள் கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், தங்கள் கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு அதிகாரிகள் சென்றது முறையற்ற செயல் என்றுகூறி விவசாயிகள் பலர் வேதனை யுடன் புலம்பியபடி சென்றனர்.
Related Tags :
Next Story