ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் சினிமா துறையில் மாற்றம் ஏற்படும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் சினிமா துறையில் மாற்றம் ஏற்படும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2020 10:45 PM GMT (Updated: 7 Feb 2020 2:58 PM GMT)

ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் சினிமா துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கன்னியாகுமரி, 

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரிக்கு வந்தார். நேற்று காலை 6 மணிக்கு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அவரை கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் வரவேற்றார். அங்கு பகவதி அம்மன் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறது. ஏராளமான நலத்திட்டங்களை நாள்தோறும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். தமிழகத்துக்கு கூடுதலாக 11 மருத்துவக்கல்லூரிகளை அவர் பெற்றுத்தந்து உள்ளார். இதன்மூலம் அதிக மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும். ஒரே அரசு 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்றுத்தந்துள்ளது வரலாற்று சாதனையாகும்.

சேலத்தில் ரூ.1000 கோடி செலவில் கால்நடை பூங்காவுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் இந்த கால்நடை பூங்கா அமைய உள்ளது. கால்நடை தொடர்பான மருத்துவ படிப்புகள், ஆராய்ச்சிகள் போன்ற பல்வேறு வசதிகள் இதில் இடம்பெறும்.

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. விவசாயத்தை சார்ந்தே இது உள்ளது. எனவே, மக்கள் நன்மைக்காக நாட்டுமாடு, நாட்டுக்கோழி போன்ற நாட்டுப்புற இனங்கள் அழியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு எண்ணற்ற தலைவர்களுக்கு அரசு விழா எடுத்து வருகிறது. அவர்களுக்கு மணிமண்டபங்களும் கட்டப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ஜெயலலிதா ஆட்சியில் சிலை அமைக்கப்பட்டது. அவருக்கு மணிமண்டபம் கட்ட தோவாளையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அங்கு மணிமண்டபம் கட்டப்படும். அதேபோல கன்னியாகுமரி காந்திமண்டம், காமராஜர் மணிமண்டபங்களை சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வது பற்றிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சினிமா படங்களின் வசூல் பற்றி தோராயமாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வருமானவரி சோதனை போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. படங்களின் வசூல் தொடர்பாக உண்மைத்தன்மை தெரிய ஆன்லைன் டிக்கெட் விற்பனை உதவும். சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு அதிபர்களுக்கு படங்களின் வசூல் பற்றிய உண்மைத்தன்மை தெரியவரும். இதன்மூலம் சினிமாதுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பொதுமக்களும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் சரியான விலையில் ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முடியும்.

இதுதொடர்பான 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி இறுதி செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைன் டிக்கெட் திட்டம் அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story