முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் ; ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து பேச்சு


முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் ; ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து பேச்சு
x
தினத்தந்தி 8 Feb 2020 3:45 AM IST (Updated: 7 Feb 2020 9:03 PM IST)
t-max-icont-min-icon

முடியாது என்று இருக்காமல், முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து பேசினார்.

வேலூர், 

வேலூர் ஊரீசு கல்லூரியின் விளையாட்டு விழா நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுவழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நெல்சன் விமலநாதன் தலைமை தாங்கினார். 23-வது ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

நான் பள்ளியில் படிக்கும்போது விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடத்தொடங்கினேன். எனது தந்தை படிக்காவிட்டாலும் அவர் என்னை ஊக்குவித்தார்.

கல்லூரியில் நடந்த முதல் போட்டியில் 2-வது இடம்பிடித்தேன். தொடர்ந்து பயிற்சி எடுத்து அடுத்த போட்டியில் முதலிடத்தை பிடித்தேன். 20 வயதில் தீவிர பயிற்சியில் ஈடுபடத்தொடங்கி 30 வயதில்தான் சாதித்தேன். எனவே வயது ஒரு தடையில்லை. தொடர்ந்து பயிற்சிசெய்ய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கை நம்மால் அடையமுடியாது என்று முயற்சி செய்யாமல் இருந்தால் வெற்றிபெற முடியாது. முயற்சி செய்தால் வெற்றிபெறலாம். படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

விளையாட்டு மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். விளையாட்டில் நீங்கள் சாதித்தால் வேலைவாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். கல்லூரி பருவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டிய பருவம். நீங்கள் எதையும் முடியாது என்று இருக்காமல், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நிச்சயமாக வெற்றிபெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story