4 மாவட்ட அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம்; கேள்விக்கு பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திணறல்
வேலூரில் நடந்த 4 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் தொடக்கக்கல்வித்துறை இயக்குனரின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில்கூற முடியாமல் திணறினர்.
வேலூர்,
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நேற்று காலை நடந்தது.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். தொடக்கக்கல்வித்துறை இணை இயக்குனர் பாஸ்கர் சேது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் முத்து பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அனைத்து மாணவர்களுக்கும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா, இல்லை என்றால் அதற்கு என்ன காரணம், அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளின் செயல்பாடுகள், ஆங்கில பேச்சு பயிற்சி குறித்து ஒவ்வொரு அதிகாரியிடமும் கேள்வி எழுப்பினார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள் பள்ளிகளுக்கு ஆய்வுசெய்ய செல்லும்போது எந்த வகுப்புக்கு சென்று ஆய்வுசெய்தீர்கள், அப்போது அங்கு என்ன பாடம் நடத்தினார்கள், மாணவர்களுக்கு புரியும்படி நடத்தினார்களா, ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து நீங்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்டீர்களா, அதற்கு மாணவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள், ஒரு வாரத்துக்கு எந்தெந்த பாடங்களுக்கு எத்தனை வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டார்.
ஆனால் அவரது கேள்விக்கு அதிகாரிகள் பலர் பதில்கூற முடியாமல் திணறினார்கள். மேலும் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும்போது மாணவர்களின் கற்றல் திறனை அறியவேண்டும், அவர்களிடம் ஆங்கில வார்த்தைகளை கூறி அதற்கு தமிழில் அர்த்தம் கேட்கவேண்டும். தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில பேச்சு பயிற்சியளிக்க புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சு பயிற்சியளிக்க வேண்டும்.
ஆங்கிலம்தான் உலக மொழியாக இருக்கிறது. எனவே அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். ஆய்வுக்கு செல்லும்போது மாணவர்களின் கற்றல்திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story