திருநின்றவூரில் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநின்றவூரில் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆவடி,
ஆவடி அடுத்த திருநின்றவூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பிரகாஷ் நகர், அந்தோணி நகர், தாசர்புரம், கோமதிபுரம், லட்சுமிபுரம், முருகேசன் நகர், ஐஓவி நகர், எம்.ஜி.ஆர். நகர், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கட நகர், பெரியார் நகர், பெரிய காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் சேரக்கூடிய குப்பைகளை கொட்டுவதற்கு சாலைகளில் ஆங்காங்கே இரும்பாலான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் அதை லாரிகளில் ஏற்றி அகற்றி வருகின்றனர். சமீபகாலமாக பல பகுதிகளில் இந்த இரும்பு குப்பைத்தொட்டிகள் இல்லாமல் சாலையோரங்களில் கொட்டிவிடுகின்றனர். இப்படி கொட்டப்படும் குப்பைகளை ஊழியர்கள் சரிவர அகற்றுவதில்லை.
குறிப்பாக ராமதாசபுரம், சுதேசி நகர், திருவேங்கட நகர், பெரியார் நகர், தர்மராஜா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை. இதனால் குப்பைகள் சாலையில் தேங்கி கிடக்கின்றன.
தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
நாய், மாடு, ஆடு, பன்றி போன்றவை குப்பைகளை அவ்வப்போது கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுகின்றன. சில நேரங்களில் அந்த குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதால் புகையால் பொதுமக்களுக்கு பல்வேறு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து போன்றவையும் தெளிப்பது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story