சுவரில் துளைபோட்டு பிரபல நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது


சுவரில் துளைபோட்டு   பிரபல நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2020 3:30 AM IST (Updated: 8 Feb 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

சுவரில் துளைபோட்டு பிரபல நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய், 

பால்கர் மாவட்டம் நைகாவ் பகுதியில் தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் பிரபல முத்தூட் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் 3 கொள்ளையர்கள் இந்த நிதி நிறுவனத்தின் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்தனர். கொள்ளையர்கள் நிதிநிறுவனத்தில் தங்க நகைகள், பணம் வைக்கப்பட்டு இருக்கும் அறையின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது நிதி நிறுவனத்தில் செய்யப்பட்டு இருந்த நவீன பாதுகாப்பு அம்சங்களால் கொள்ளையர்கள் உள்ளே புகுந்த தகவல் நிறுவன அதிகாரிகளுக்கு செல்போனில் சென்றது.

2 கொள்ளையர்கள் சிக்கினர்

இது குறித்து நிதிநிறுவன அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கொள்ளையர்களை பிடிக்க நிதி நிறுவனத்துக்கு விரைந்து சென்றனர். இதில் 2 கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒரு கொள்ளையன் கற்களை போலீசார் மீது வீசிவிட்டு தப்பியோடினான். கொள்ளையன் வீசிய கல் தாக்கி சம்பாஜி பால்வே, பிரதீப் கும்பர் ஆகிய 2 போலீசார் காயமடைந்தனர்.

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாபர் ஷா(வயது32), முக்சேத் சேக்(24) மற்றும் சாஜின் என்பது தெரியவந்தது. இதில் சாஜின் தப்பியோடியவர் ஆவார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாா் பிடிபட்ட 2 கொள்ளையர்களையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கொள்ளையனை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story