டோம்பிவிலியில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


டோம்பிவிலியில்    மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்   முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2020 4:30 AM IST (Updated: 8 Feb 2020 3:12 AM IST)
t-max-icont-min-icon

டோம்பிவிலியில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை,

தானே மாவட்டம் டோம்பிவிலியில் குடியிருப்பு பகுதிகளில் பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை வெளியேற்ற போடப்பட்டு உள்ள குழாய்கள் சேதம் அடைந்து ரசாயன கழிவுகள் சாலையோரங்களில் வெளியேறி மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் கல்யாண் வந்திருந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநகராட்சி, மாநில தொழில்மேம்பாட்டு கழகம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, டோம்பிவிலியில் மாசு ஏற்படுத்தும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தொழிற்சாலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்

பின்னர் இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டோம்பிவிலியில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு 15 நாட்களில் சரியான இடத்தை தேர்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் மக்களுக்கு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் தொலைதூரத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்படும். தொழிற்சாலைகள் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகளை மதித்து செயல்பட வேண்டும்.

இங்கு சேதமடைந்து உள்ள ரசாயான கழிவுகள் செல்லும் குழாய்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. டோம்பிவிலியில் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆராய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் தேவையான இடங்களில் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story