முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்


முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Feb 2020 4:00 AM IST (Updated: 8 Feb 2020 7:19 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, ஜூடோ, கபடி, டென்னிஸ், குத்துச்சண்டை, இறகுபந்து மற்றும் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது கூறியதாவது:–

விளையாட்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வளர்ந்த நாடுகளில் விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அதே போல தமிழகத்திலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் தடகள போட்டிகளில் பல விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வெற்றி பெற்று வருகின்றனர். அனைவரும் வாழ்நாள் முழுவதும் ஏதாவதொரு விளையாட்டினை விளையாட வேண்டும். அதன் மூலம் நம் உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

விளையாட்டு என்பது சிறுவர்களுக்கானது என்று நினைக்காமல் அனைத்து வயதினரும் விளையாட வேண்டும். படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுக்க வேண்டும். விளையாட்டில் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. போட்டியில் பங்கேற்பது தான் மிகவும் முக்கியம் ஆகும். எனவே வருங்காலங்களில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து 800 மீட்டர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story